×

ஜப்பானில் ரூ.1000 கோடி மோசடி நிசான் முன்னாள் தலைவர் லெபனான் தப்பியோட்டம்: அநீதியில் இருந்து தப்பியதாக கருத்து

டோக்கியோ: நிதி மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷன், லெபனான் தப்பி சென்றுள்ளார். ஜப்பானின் நிசான் மோட்டார் மற்றும் ரெனால்ட் கார் நிறுவனத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கார்லோஸ் கோஷன். இவர்  இந்த நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நிறுவனம் நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. மோசடி புகாரின் பேரில் கோஷன் கடந்த 2018ம் ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இந்தாண்டு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் கோஷனுக்கு டோக்கியோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த அவர் தினமும் தனது பிரதான வழக்கறிஞரான ஜூனிசிரோ ஹிரோனாகாவை சந்தித்து வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தார்.  

இந்நிலையில், தான் லெபனானில் இருப்பதாக கோஷன் தனது பிரதிநிதிகள் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், ‘நான் தற்போது லெபனானில் இருக்கிறேன். தில்லுமுல்லு, பாகுபாடு மிகுந்த மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் ஜப்பானிய நீதி துறையில் நீண்ட நாட்களுக்கு பணய கைதியாக இருக்க முடியாது. நான் நீதியில் இருந்து தப்பி செல்லவில்லை. அநீதியில் இருந்தும், அரசியல் துன்புறுத்தலில் இருந்தும் தப்பி செல்கிறேன்,’ என்று கூறியுள்ளார். ஆனால், ஜப்பானில் இருந்து எப்படி தப்பி சென்றார் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. மேலும், அடுத்த வாரம் செய்தியாளர்களை சந்திக்கப் போவதாகவும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். இவர் தனியார் ஜெட் விமானம் மூலமாக துருக்கியில் இருந்து பெய்ரூட் வந்ததாக லெபனானை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் ஆச்சரியம்
பிரான்ஸ் பொருளாதாரம் மற்றும் நிதித்துறை அமைச்சகத்தை சேர்ந்த ஏக்னஸ் பன்னீர் ரூனாசெர், உள்ளூர் ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கோஷன் லெபனானில் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக தகவல் அறிந்து வியந்தேன். அவர் ஒரு நல்ல குடிமகன். சட்டத்துக்கு கட்டுப்பட்டவர். அதனால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும், என்றார்.


Tags : Nissan ,Lebanon ,Rs , Nissan,ex-leader,Lebanon fleeing , Rs.
× RELATED உதகை மலர் கண்காட்சி: நுழைவு கட்டணம் குறைப்பு